Wednesday, November 23, 2011

ஒரு தந்தை பிறந்தான்..!!

ஒரு தந்தை பிறந்தான்..!!


"ஆய காலையிள், ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க்
குகன் எனும்நா மத்தான்;
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல்திரள் தோளினான்" 

 என்று கம்பனால் புகழப்பட்ட அந்த குகன் இப்போது என் மகன் வடிவில்... முன்புஉளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா
அன்புஉள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம்
 

என ராமன் தன்னுடன் பிறந்தவர்கள் ஐவராகி விட்டதாக கொண்டாடிய குகன் என் மகன்!

குகன் (Guhan) பிறந்து சரியாக ஒரு மாதம் முடிவடைந்தது.

11/15/2011 அன்று சரியாக காலை 7:17 க்கு பிறந்தான். அவனை நான் பார்த்த கணம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.

அறுவை சிகிச்சை பிரசவம் என்பதால் ஒரு திரை இட்டிருந்தார்கள். திரைக்கு பின்னால் ஒரு கண்ணாடி வைக்க பட்டிருந்தது. அதில் அறுவை சிகிச்சையை நான் நேரில் பார்த்து கொண்டிருந்தேன். எல்லாம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கையில் ஒரு நொடி பொழுதில் அவனை வெளியே எடுத்தார்கள். அவனை அந்த கண்ணாடியில் பார்க்கும் போது ஒரு துளி கண்ணீர் என்னை அறியாமல் என் கண்களை தழுவியது. வார்த்தையில் விவரிக்க முடியாத வர்ணஜாலம் அது.  எனது மனைவியை கவனித்தேன், அவள் கண்களிலும் நீர். அவள் கையை பிடித்து அழுத்தினேன். அவள் என்னை பார்த்து சிரித்தால் வார்த்தைகள் இல்லாத மௌன சம்பாஷனை நடந்தது எங்களுக்குள்.

"Dad, you can come and see the baby..." என்று அங்கு இருந்தவர்கள் அழைக்க, நான் என் மகனை அருகில் பார்க்க சென்றேன்.
விதைத்த விவசாயி விளைநிலத்தை பார்த்து சந்தோஷ படுவான். நான் விதையாகவே இருந்திருக்கிறேன். என் வித்து தளிர்த்து துளிர் விடுவதை நேரில் பார்க்கும் எனக்கு எல்லையற்ற சந்தோசம்! அவனை விதவிதமாக புகைப்படம் எடுத்தேன். இன்னும் கழிவுகள் நீங்காத தூய்மையான மேனி. அவன் வயற்றில் தொங்கும் தொப்புள் கொடியை அறுக்க விருப்பமா என என்னை கேட்டார்கள்.

உணர்ச்சி பூர்வமாக பார்த்தால் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இருந்த ஐயிரண்டு மாத உறவை அறுக்கிறேன்!
அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒரு உயிர் தனித்து வாழும் பரிணாம வளர்ச்சிக்கு வழி செய்கிறேன்!

ஒன்றை துண்டிதால் மற்றொன்று வளருமா..? ஓ.. அதனால் தான் திறப்பு விழாக்களில் ரிப்பன் வெட்டுகிறார்களோ?

தயக்கத்துடன் அந்த கத்திரியை வாங்கி அதை துண்டித்தேன். கருவாச்சி காவியத்தில் ஒற்றை ஆளாக பிள்ளை பெற்று, கீழே கிடக்கும் ஒரு சிறு ப்ளேடை வைத்து தொப்புள் கொடியை அறுத்த கருவாச்சி கண்முன் வந்து சென்றால்.

மீண்டும் சில படங்கள் எடுத்து முடித்த பின், என்னை தாயிடம் போக சொன்னார்கள். அங்கு சென்றதும் குழந்தையை என் கையில் கொடுத்தார்கள். அவனை முதல் முறையாக தூக்கினேன். என்ன ஒரு உணர்வு..! பிறந்த குழந்தைகளை தூக்குவதற்கு நான் எப்போதும் தயங்குவேன். ஆசை இருந்தும் பயத்தின் காரணமாக மறுத்திருக்கிறேன்.
அனால், இவனை தூக்கும் பொழுது, பயம் இல்லை அனால் ஜாக்கிரதையாக இருந்தேன். இவன் என் மகன் என்பதால் அந்த தைரியம் வந்ததோ? அவனை தூக்கி அவன் தாயிடம் காண்பித்தேன். அவள் சிரித்தால் அனால் கண்களில் நீர் துளிர்த்து கொண்டு தான் இருந்தது. அப்போது வைரமுத்துவின் வார்த்தைகள் எனக்கு ஒலித்தது..

"கண்ணு காது மூக்கோட, ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கைல என்னென்ன நெனச்சிருப்ப..
கத்தி எடுபவனோ.. களவாட பிறந்தவனோ..
தரணியாள வந்திருக்கும் தாசில்தார் இவன்தானோ?"

எந்த தரணியை இவன் ஆழ்வான் என எனக்கு தெரியாது.. அனால் என் தரணி இவன் தான் இனி என முடிவானது..

பிறகு தொலைபேசியில் என் அப்பாவிற்கு தெரியபடுத்தினேன். மகிழ்ச்சி என்றார்.. உண்டனே, அவன் மிதுன ராசிக்காரன் என்றார்.
ராசிகளுக்கு அப்பாற்பட்டவனாகவே எனக்கு பட்டான்.
இவன் வந்த நேரம் இவனுக்கும் எல்லோருக்கும் நல்ல ராசியாக தான் இருக்கும். :)

அவனையும் எங்களையும் வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி...!!!

-ஓம்

No comments:

Post a Comment