Thursday, September 3, 2015

ஊழ் வெல்லும்!

ஊழ் வெல்லும்!
=============================
கால இயந்திரத்தில் ஏறி அமர்ந்து, "அந்த" காலத்தை உள்ளீடு செய்து அக்காலத்திற்குச் சென்றான். அவள் அப்பழத்தை கடிக்கும் வேளையில் பாய்ந்து அதை தட்டி விட்டான். அருகிலிருந்த புதரிலிருந்து சீறி மேல் வந்து விழுந்த பாம்பை வெட்டி வீழ்த்தினான். "அவர்கள்" நடப்பது புரியாமல் விழித்தனர். எல்லாம் முடிந்த மகிழ்ச்சியுடன் அவன் திரும்பிப் பார்த்தான், அங்கு அவன் கால இயந்திரம் இல்லை!

Saturday, August 22, 2015

வர்ஷினி

வர்ஷினி 

முத்தான சிரிப்புக்காரி
முன்கோபக் குறும்புக்காரி
முழி சுருட்டி ஆள மயக்கும் 
மகிழம்பூ மனசுக்காரி!

அப்பன பாத்து ஆர்ப்பரிப்பா 
சிரிச்சு சிதறி வான் குதிப்பா..
தோள் மேல ஏறி தேர் விடுவா
தேவதையா அவளும் வளம் வருவா!

ஆத்தாவ பாத்தா பயந்திடுவா
பயந்திடும் படி தான் அவ நடிப்பா..
நேரம் பாத்து காத்திருப்பா 
அறையில போட்டு அவளடைப்பா!

அவள பாத்து வந்த கோவம் 
அழுகையா கரைஞ்சு மாறி போகும்..
அதையும் மீறி கோவம் வந்தா  
அசலூரு தேடி தான் அது போகும்.!!

Friday, August 21, 2015

தந்தை!

தந்தை!
===============================================

இலக்கியம் பயின்ற அவரை
இயந்திர வேலைக்கு அனுப்பியது
இல்லாமையும் இயலாமையும்!

எதற்க்கும் சளைக்காமல் எதிர்நீச்சலிட்டு
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாமல் போனாலும்
தறித் தொழில் பழகி அதிலும் ஓர் பட்டம் பெற்றார்!

தன் பெயரின் முன் பகுதி போலவே
வாழ்வின் ஒரு பகுதியும் பாலையாகத்தான்
விதித்தது வாழ்க்கை. அது சரி..
பாலை இல்லாமல் முல்லையென்றும்
முழுதாய் தெரிவதில்லை!

கனவு தொலைந்ததை தவறிகூட
தன் விழி காட்டியதில்லை..
வழி முன் கனவு விரிந்து வளர
விழி மூடிவரும் கனவிற்கு விலக்களித்தார்!

இயன்ற வரை மட்டுமில்லாமல்
ஈட்டியதற்கு மேலும் இன்னல்
தெரியாமல் எங்களுக்கு இன்வாழ்வு
காட்டிய இரவுலாவி!

பாரதியும் பித்தாகோருசும் பயிற்றுவித்து
அறிவியல் அலசும் அறிவதனை அளித்து
அவ்வறிவு பிழைக்க அறம் கூற்றாக வேண்டுமென
அரிச்சுவடியும் கற்றுத்தந்தார்!

என் மகன் எழுத்துருக்கம் பேசுகிறான் - இவர்
தன் தாகம் தீராமல் வானசாஸ்திரம் பயில
பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.
கல்விக்கு எது கரை, கற்ப்பவர்க்கு ஏது நரை!

என் களிப்பான காலங்களிலும்
கடினமான சூழல்களிலும், பாதை தவறாமல்
பத்திரமாக பார்த்துக் கொண்டது - அவரின்
பரந்தாம வரிகள், பதறாத நெறிகள்!

ஆதிச்ச நல்லூராய் இருந்தாலும்
அணுமின் நிலையாக இருந்தாலும்,
எனக்கு என்றும் அவர் தான் அகரம்!!

-- உங்கள் அன்பு மகன்!

Saturday, March 2, 2013

மனத்திற்கு

மனத்திற்கு
சென்றதினி மீளாது, மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்:
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

--பாட்டன் 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம்

விஸ்வரூபம் வெளியான முதல் நாளே போய் பார்த்தேன்.
கமலின், தீவிரமான ரசிகன் என்ற முறையில் விசில் அடித்து படத்தை கண்டேன். இந்த படம் கமலின், இன்னும் சொல்ல போனால் இந்தியாவின் ஒரு உண்மையான, நேர்மையான படைப்பு.

நேர்மை பல நேரங்களில் சங்கடத்தை கொடுக்கும்.
இப்போது அப்படி ஒரு சோதனையை தான் கமல் சந்தித்து கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் காட்ட பட்டிருக்கும் காட்சிகளுக்கு கமலிடம் 300 க்கும் மேற்ப்பட்ட ஆதாரங்கள் இருப்பதாக படித்தேன், அப்படி இல்லாமல், இப்படி ஒரு படத்தை துணிச்சலாக எடுப்பதென்பது இயலாத காரியம்.

ஒரு சாதாரண ரசிகனாக (அப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து) நான் அந்த படத்தை பார்க்கும் போது அதில் எந்த ஒரு முஸ்லீமையும் அவர் தாக்கி படம் எடுக்க வில்லை.

இன்னும் சொல்லப்போனால் கதையின் நாயகனே ஒரு முஸ்லீம் ஆகத்தான் வருகிறார். மிகவும் நுட்பமாக பல இடங்களில், முஸ்லீம் களுக்கு சாதகமாக பேசுகிறார்.

ஒரு உதாரணம், படத்தில் ஒரு காட்சி,

தொழுகை செய்யும் கமலை பார்த்து விநோதாமாக "What the hell is HE doing?" என்று கேட்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி, அதற்க்கு அவர் மேலதிகாரி கூறும் பதில் "He is praying for you... Its just the Arabic version!" இதை விட நளினமாக, அழுத்தமாக ஒரு வரி வசனத்தில் சகோதரத்துவத்தை கூறி விட முடியுமா என்று தெரியவில்லை.

அவர் விளையாட்டாக, வேடிக்கையாக பேசுவது இந்துக்களை பற்றிதான். நாத்திகவாதியான கமல் கூட எதிர்ப்பது இந்து கடவுள்களை மட்டும் தான், அவருக்கு அல்லாவும் ஏசுவும் வசைபாட கண்ணில் தெரியாது. இது அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் பொருந்தும். அது இருக்கட்டும், நாம் அந்த கருத்துக்குள் நுழைய வேண்டாம்.

ஆனால் ஒரு இந்தியன் என்ற அடிப்படையில் பெருமைப்பட வேண்டிய, கொண்டாடப்பட வேண்டிய படம்.

ஹே ராம் வெளியான பொது அதை வசைபாடி விட்டு, பின்னர் அதன் பெருமைபாடிய சிறுவர் தான் நாம், ஆளவந்தானை அலைகழிக்க விட்டவர்கள், மகாநதியை மதிக்காதவர்கள், அன்பே சிவத்தை அறவனைக்காதவர்கள், இப்போது விஸ்வரூபத்தை எதிர்க்கிறோம்.

இப்போது நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் அரசியல் சார்ந்தவை எனபது அப்பட்டமான உண்மை. ஒரு திரைப்படத்தை பார்த்து திசை மாறும் அளவிற்கு நாம் ஒன்றும் கற்கால மனிதர்கள் அல்ல.

பாரதியை பசியில் சாகவிட்டு பின் அவன் பெருமை பேசும் நாம், கக்கனை கண்டுகொள்ளாமல் விட்டு, இன்று அவர் கடமை போற்றும் நாம், கமல் என்ற ஒரு மாபெரும் நடிகனை, கலைஞனை தொலைத்துவிட்டு பின் துயரபடப்போகிறோம்!!!

Sunday, December 23, 2012

2012 இல் நான் படித்த தமிழ் புத்தகங்கள்2012 இல் நான் படித்த தமிழ் புத்தகங்கள்


 • மூன்றாம் உலகம் -- கவிஞர் வைரமுத்து 
 • தேசாந்திரி -- S. ராமகிருஷ்ணன் 
 • உலோகம் -- ஜெயமோகன் 
 • பாரதியும் ஷெல்லியும் -- ரகுநாதன் 
 • சிவகாமியின் சபதம் -- கல்கி 
 • பொய்மான் கரடு -- கல்கி 
 • மோகினி தீவு -- கல்கி 
 • கம்யூனிசத்தின் கோட்ப்பாடுகள் -- பிரடெரிக் ஏங்கெல்ஸ் (மொழிபெயர்ப்பு)
 • இனஒடுக்கலும் விடுதலை போராட்டமும் -- இமயவரம்பன்
 • வாஷிங்டன்இல் திருமணம் -- சாவி 
 • கி.மூ - கி.பி -- மதன் 
வருடத்தின் இறுதி வாரத்தில்  நான் படித்து என்னை பாதித்து சிந்திக்க வைத்த நூல் 

குருதிப்புனல் --இந்திரா பார்த்தசாரதி 
Monday, December 17, 2012

பாரதியின் பார்வை...

பாரதியின் பார்வையில் கல்வி!

இன்று தன் ஆசிரியரை திட்டாத, சபிக்காத மாணவர்கள் மிகவும் சொற்பம்.

பாரதியும் இதற்க்கு விதிவிலக்காக தெரியவில்லை, அவரும் தன கல்வி பருவத்தை வெறுத்துள்ளார்! அனால் அவர் வெறுப்பின் காரணம் மிக தெளிவாக இருந்தது. அவர் ஆசிரியர்களையும் கல்வி முறையையும் மிகவும் வெளிப்படையாகவே சாடினார். இன்னும் சொல்லபோனால் சற்று கோபமாகவே திட்டினார்!

அவர் அன்று தன் ஆசிரியர் மீதும், கல்வியின் மீதும் வைத்திருந்த கூறிய பார்வை யாவும், இன்றிருக்கும் நம் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பாடதிட்டதிற்க்கும் பொருந்தும்!


ஏதிலர் தரும் கல்வி படுகுழி
ஏறி உய்தற் கரிய கொடும்பிலம்
தீதியன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினும்  அசிரத்தையும்
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம்
வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினேன்!!!

எதுவும் இல்லாதவன் தரும் கல்வி படுகுழி, அப்படி பாடம் நடத்தும் கல்வித்திட்டம் விலங்குகள் வாழும் வெங்குகை என்கிறார் பாரதி!

ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வை வேண்டும்.

தான் கற்பிக்கும் பாடம் ஏன், எதற்கு என்பதையும் சேர்த்து கற்பித்தல் மிகவும் அவசியபடுகிறது.

உதரனத்திற்க்கு "Travelling Sales man problem" என்ற ஒரு மிக முக்கியாமான பகுதி எங்கள் பாடத்தில் இருந்ததுண்டு, அனால் அது ஏன், எங்கு பயன்படுகிறது, எதற்காக நாம் அதை படிக்கிறோம் என்பது தெரியாமலேயே அதை கடந்து வந்திருக்கிறோம். இன்று நடை முறையில் அதன் பயன்பாட்டை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. மீண்டும் அந்த புத்தகத்தை தேடி படித்தால் மிக தெளிவாக புரிகிறது. இதை கல்லூரியில் ஒழுங்காக படிக்காத வருத்தமும்நேர்கிறது, அதை ஒழுங்காக படித்திருக்க வேண்டிய அவசியமும் புரிகிறது.

நம் கல்வித்துறையின் தரத்தை உயர்த்தினால் தான், நமக்கு உலகில் கிடைக்கும் மிச்சசொச்ச மரியாதைகளும் மிஞ்சும்!!

--ஓம்